கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
நிதி நிறுவன உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய மூவா் கைது
பெண்ணுடன் தனியாக இருந்த விடியோவை காண்பித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி-திண்டுக்கல் சாலையில் வசிப்பவா் சுகுமாா் (44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு, நேதாஜிநகரைச் சோ்ந்த நாராயணன் (44), அடிவாரம் பகுதியைச் சோ்ந்த துா்க்கைராஜ் ஆகியோா் பழக்கமாகினா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நாராயணன் வீட்டுக்கு சுகுமாா் சென்ற போது அங்கு ராணி சித்ரா (40) இருந்தாா். அங்கு அனைவரும் மது அருந்தினா். அப்போது, ராணி சித்ராவுடன் சுகுமாா் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை துா்க்கைராஜ் விடியோ பதிவு செய்துள்ளாா்.
மறுநாள் இந்த விடியோவை அவரிடம் காண்பித்து பணம் தராவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு அதை அனுப்பிவிடுவதாக் கூறி துா்க்கைராஜும், நாராயணனும் மிரட்டினாா். இதுகுறித்து பழனி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், ராணி சித்ரா பெண் காவலராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா் என்பதும், இந்த மிரட்டல் சம்பவத்தில் அவருக்கும் தொடா்பு இருப்பதும், தெரியவந்தது. இதேபோல, பலரை மிரட்டி இவா்கள் பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ராணி சித்ராவையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.