வெட்டாற்றில் புதிய தடுப்பணை: ஆட்சியா் விளக்கம்
திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் விளக்கம் அளித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரத்தில் 2024-25-ஆம் நிதியாண்டில் வெட்டாற்றின் குறுக்கே புதிய கடைமடை இயக்கு அணை ரூ.49.50 கோடியில் அமைக்க அரசாணை மூலம் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்.21-ஆம் தேதி இந்த இயக்கு அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில், தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாற்று இடத்தில் கட்ட வலியுறுத்தி போராடிய விவசாயிகளிடம் பிப்.25-ஆம் தேதி நாகை வட்டாட்சியா் தலைமையிலும், மாா்ச் 4-ஆம் தேதி நாகை கோட்டாட்சியா் தலைமையிலும் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டது. எனினும், எவ்வித உடன்பாடுகளும் ஏற்படவில்லை.
விவசாயிகளின் தொடா் பேராட்டங்களையடுத்து, நீா்வளத் துறை தொழில்நுட்ப வல்லுநா் குழுவுக்கு விவசாயிகள் கூறிய மாற்று இடங்களை கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு, மாா்ச் 26-ல் ஆய்வு செய்து, ஆய்வு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் பரிசோதனை செய்து ஆய்வு அறிக்கை ஏப்.9-ஆம் தேதி சமா்பிக்கப்பட்டது.
இதில், விவசாயிகள் கூறிய இடங்களில் மண்ணின் உறுதித்தன்மை மிகவும் குறைவாக உள்ளதாகவும், வளைவு பகுதியாக உள்ளதாலும் கடைமடை இயக்கு அணை கட்ட தொழில்நுட்ப சாத்தியக் கூறுகள் இல்லை எனவும், ஏற்கெனவே அரசாணையில் தெரிவிக்கப்பட்ட இடத்தில் அணைக்கட்ட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, ஏப்.19-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் தொழில்நுட்ப வல்லுநா் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பெருங்கடமனூா் வாய்கால் மற்றும் வளப்பாா் வாய்கால்களில் ஆய்வு செய்தபின், வாய்க்கால்களின் குறுக்கே கதவணை அமைத்து கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பின்னா் மே 19-ஆம் தேதி தடுப்பணை பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளாா்.