நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!
``தவெக-வின் வேகம் பத்தாது... திமுக மீதான விமர்சனங்களில் நான் பின்வாங்கவில்லை” - காளியம்மாள் பேட்டி
நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் விலகிய காளியம்மாள், 'தி.மு.க பக்கம் செல்லப்போகிறார். இல்லை, இல்லை... தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார்' என பல செய்திகள் றெக்கைக் கட்டின. நாகப்பட்டிணம் ஏரியாக்களில் பலத்த எதிர்பார்ப்பெல்லாம் எழுந்தது.
ஆனால், எந்தப் பக்கமும் செல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார் காளியம்மாள். "அரசியலில் இருந்தே மொத்தமாக ஒதுங்கிவிட்டாரோ..." என கேள்விகள் முளைத்துள்ள நிலையில், அதுகுறித்து காளியம்மாளிடமே பேசினேன்.
``தமிழக வெற்றிக் கழகத்தில் நீங்கள் இணையவதற்கான பேச்சுவார்த்தையெல்லாம் முடிந்துவிட்டதாக சொல்கிறார்களே!”

``நான் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பரவும் தகவல்கள் அனைத்தும் அவதூறுதான். நாம் தமிழர் கட்சியில் தொடர்வதில் எனக்கு ஏகப்பட்ட நெருடலும் வருத்தமும் ஏற்பட்டதால் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டேன். ஆனாலும் மீனவர், விவசாய பெருங்குடி மக்களின் உரிமை சார்ந்த ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்துவருகிறேன். கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கனை நானே முன்வைத்திருப்பதால் `எடுத்தோம், கவிழ்த்தோம் என எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. அதேசமயம் கட்சிகளில் இணைந்து மக்கள் அரசியலை தொடர்வதில் உறுதியாக இருக்கிறேன். எந்த கட்சியில் இணைகிறேன் என்பதை என்னை நம்பி நிற்கும் மீனவ, விவசாய பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்”
``அந்த கட்சியில் இணைய இருப்பதால் தானே, மந்தமான நிலையில் த.வெ.க இருந்தாலும் நா.த.க-வை மட்டும் விமர்சிக்கிறீர்கள்!”
"அப்படியில்லை... உள்ளாட்சி பிரதிநிதிகளைப் பெறாமல், உட்கட்டமைப்பை வலிமைப்படுத்தாமல், மக்களைச் சந்திக்காமல் எந்தவொரு கட்சிக்கும் வெற்றி சாத்தியமில்லை. அது நாம் தமிழருக்கும் பொருந்தும், த.வெ.க-வுக்கும் பொருந்தும். தேர்தல் நெருங்கிவிட்ட சூழலிலும்கூட, த.வெ.க அமைதியாக இருப்பதும், மெல்ல மெல்ல நகர்வதும் அவர்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை"

``நா.த.க-வையும் த.வெ.க-வையும் விமர்சிக்கிறீர்களே. ஒருவேளை தி.மு.க-வில் இணையப் போகிறீர்களா?”
``"ஈழ விடுதலை போராட்டத்தில் தி.மு.க எடுத்த தவறான நிலைப்பாடு, சாராய விற்பனை, மகளிர் உரிமை தொகையால் எந்தப் பயனும் இல்லை என்பது போன்ற என்னுடைய விமர்சனங்களிலிருந்து நான் இப்போதும் பின்வாங்கவில்லை. அதுமட்டுமல்ல... மீனவர், விவசாயிகள் போராட்டங்களில் இப்போதும் தி.மு.க அரசின் செயல்பாடுகள் குறித்து கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கத்தான் செய்கிறேன்.”

``பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க குறித்து..!”
``முதலில் அனைத்துக் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பேசிக் கொண்டிருக்க நான் ஒன்றும் அரசியல் விமர்சகர் கிடையாது. யார், யார் எந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தேர்தல் நெருக்கத்தில்தான் இறுதி வடிவம் பெறும். பார்ப்போம்!”