சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!
Vikatan Play : 'வாஷிங்டனில் திருமணம்' படித்திருக்கிறீர்களா? - உங்கள் அனுபவத்தை அனைவரும் `கேட்கலாம்’
ஆனந்த விகடன் வார இதழில் 1963-ல் எழுத்தாளர் யாரென்று குறிப்பிடாமல், அத்தியாய எண் இல்லாமல் பதினோரு வாரங்கள் இடம்பெற்ற நகைச்சுவைத் தொடர்கதை ‘வாஷிங்டனில் திருமணம்!’.
தொடரின் கடைசி அத்தியாயம் வெளியானபோதுதான் அந்தத் தொடரை எழுதியவர் ‘சாவி’ என்பது வாசகர்களுக்குத் தெரிந்தது. அந்த இதழிலும் கூட ‘சுபம்’ என்று தொடரை முடித்த பிறகு ஒரு கையெழுத்து போல்தான் அவரது பெயர் இடம் பெற்றது.
அப்போது அவர் ஆனந்த விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த கதை பிறந்த விதம் குறித்து, பின்னர் வெளியான ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தின் முன்னுரையில் அமரர் சாவி தெளிவாகவே விவரித்திருக்கிறார்.

இந்த நகைச்சுவைக் கதைக்கு அவர் தேர்ந்தெடுத்த விஷயமும் அது நடைபெறுவதற்கு அவர் தேர்ந்தெடுத்த களமுமே சட்டென்று சிரிப்பை வரவழைக்கக் கூடியவை.
சாதாரணமாகக் கல்யாணங்களில் எதுவெல்லாம் யதேச்சையாக நடைபெறுமோ, அவற்றையெல்லாம் நகைச்சுவைக்கான இழையாகப் பின்னியெடுத்து, அதை வரிசைப்படுத்தி அழகாகக் கதையை நகர்த்திச் செல்கிறார் சாவி.
நமது பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு நேர்மாறான மற்றொரு நாட்டில், நமது பண்பாட்டுக்குச் சேதாரம் ஏற்படாத வகையில் கற்பனை விரைவாகப் பயணிக்கிறது.
சிரிப்பு ‘சிக்ஸர்’
இந்தக் களத்தில் அவர் அடிப்பதெல்லாம் சிரிப்பு ‘சிக்ஸர்’கள்தான். பெரும்பாலும் நமது கல்யாணங்களின்போது, இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அந்த நேரத்திய பரபரப்பில் நமது பி.பி, எகிறினாலும் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது அவையெல்லாம் நகைச்சுவைக்கு உரியதாகிவிடும். அந்த அடிப்படைதான் இந்த நகைச்சுவைக் கதையின் அஸ்திவாரம்.

நகைச்சுவையை விரும்பாதவர் என்று நமது நாட்டில் எவரையாவது சுட்டிக்காட்ட முடியுமா என்ன? அதிலும் எவரையும் புண்படுத்தாத, எவரும் கேட்டவுடன் சிரிக்கக் கூடிய நகைச்சுவையை யாராவது வேண்டாமென்று சொல்வார்களா என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக இது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியான ஒரு தொடரும்கூட!
இந்த அற்புதமான ‘வாஷிங்டனில் திருமணம்!’ என்ற நகைச்சுவைத் தொடர்கதையைப் படித்தவர்கள் தங்களுடைய அனுபவத்தை digital@vikatan.com என்ற இணைய முகவரிக்கு மெயில் அனுப்பலாம். அதில் சிறந்த அனுபவங்கள் ‘Vikatan Play’-வில் ஆடியோவாக வெளியாகும்.!