நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ; ரூ.30 லட்சம் மதிப்பில் சரக்குகள் எரிந்து சேதம்.. மானாமதுரை பரபரப்பு!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள டாஸ்மாக் கடை நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்தக்கடை தீ பற்றி எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே விரைந்து வந்து போலீசார் பார்த்தபோது கடை முழுமையாக பற்றி எரிந்து கொண்டிருந்தது. பல மதுபாட்டில்கள் வெடித்து சிதறியும் கிடந்தது.
தீயணைப்புத் துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், மதுபாட்டில்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்திருந்தது.
நேற்றைய தினம்தான் புதிய மதுபானங்கள் குடோனிலிருந்து வந்ததாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எப்படி தீ பிடித்தது? யார் தீ வைத்தார்கள்? எதற்காக தீ வைத்தார்கள்? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மானாமதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.