சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் என்ன?
ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி. திருவாரூர் மாவட்டம், கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர்கள் இருவரும் கடந்த 2013-இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் வீட்டில் இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஈரோட்டைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் பாலாஜி அடைக்கலம் தருமாறு உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பெருந்துறை பேருந்து நிலையத்துக்கு வந்த பாலாஜி-ஹேமலதா தம்பதியை சரவணுக்கு பழக்கமான அமுதரசன் மற்றும் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் ஆகிய மூவரும் உதவி செய்வதுபோல் கடத்திச் சென்று அமுதரசன் தோட்டத்து வீட்டில் அடைத்து வைத்ததாகவும், பின்னர் ஹேமலதாவின் தாய் மஞ்சுளாவுக்கு போன் செய்து ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிய ஹேமலதா, பாலாஜி தம்பதி தங்களை யுவராஜ், அமுதரசன், சரவணன் ஆகிய மூவர் கடத்தி வைத்து பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கில் யுவராஜ் இரண்டாம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சாட்சியங்கள், விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில், ஹேமலதா, பாலாஜி ஆகிய இருவரும் பிறழ்சாட்சிகளாக மாறியதால், யுவராஜ் உள்ளிட்ட மூவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால், யுவராஜ் உள்ளிட்ட மூவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி சொர்ணக்குமார் உத்தரவிட்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டுள்ளதால், கடத்தல் வழக்கு தீர்ப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோட்டுக்கு அழைத்து வரப்பட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து, மீண்டும் யுவராஜ் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.