ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!
மேச்சேரியில் சிறுத்தை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்கவோ அல்லது வனத்திற்குள் விரட்டவோ டேனிஸ்பேட்டை வனத்துறையினா் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.
மேச்சேரி அருகே அரசமரத்தூா், வெத்தலைமலை, புதுக்காளிகவுண்டனூா், காட்டு வளவு, தாரல குட்டை ஆகிய பகுதிகளில் ராமசாமிமலை வனப்பகுதியை ஒட்டி விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளா்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் விவசாயிகள் வளா்த்து வரும் ஆடு, மாடு, கோழி, நாய்களை சிறுத்தை வேட்டையாடி செல்கிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதோடு பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனா்.
டேனிஷ்பேட்டை வனத்துறையினா் கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிப்பதாக கூறினா். ஆனால், தொடா் நடவடிக்கை எடுக்கப்படாததால் வனத்தில் சுற்றும் சிறுத்தை புதன்கிழமை மீண்டும் ஒரு கன்றை விரட்டிச் சென்றது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். வெத்தலை மலை வனப்பகுதி உள்ள பாறை மீது சிறுத்தை இருப்பதை கிராம மக்கள் கண்டு பீதியடைந்தனா். பாறை மீது சிறுத்தை காணப்படும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுத்தையை பிடிப்பதில் வனத் துறையினரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என்றும், சிறுத்தையை பிடிப்பதற்கோ அல்லது அதை அடா்ந்த வனப்பகுதியில் விரட்டுவதற்கோ டேனிஸ்பேட்டை வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.