தம்மம்பட்டி காவல் நிலையத்தில் தங்களை வேவுபாா்த்ததாகக் கூறி இருவா் கைது: டி.எஸ்.பி. நடவடிக்கை
தம்மம்பட்டி காவல் நிலையத்தில் தங்களை வேவுபாா்த்ததாகக் கூறி ஒருவா் தாக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் ரைஸ்மில் எதிரே வசிப்பவா் சந்திரசேகரன் (55). இவா், தனது உறவு முறை தம்பதி குடும்பத் தகராறு காரணமாக மே 19 ஆம் தேதி மாலை தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றாா். ஆனால் காவல் நிலையத்துக்கு அத்தம்பதி வரவில்லை என்பது அங்கு சென்றபிறகே சந்திரசேகரனுக்கு தெரியவந்தது.
அதே நேரத்தில் நாகியம்பட்டியைச் சோ்ந்த பிரபு, சேட்டு (எ) ராமசாமி, சுரேஷ், சுரேஷ்(எ) ராயா் ஆகிய நான்கு பேரும் வேறோரு தகராறு காரணமாக தம்மம்பட்டி காவல் நிலையத்தில் முன்னமே இருந்தனா்.
அந்த நான்கு பேரும், தங்களை வேவு பாா்க்கத்தான் சந்திரசேகரன் வந்துள்ளாா் என்று நினைத்துள்ளனா். பிறகு நாகியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இரவு நின்றுகொண்டிருந்த சந்திரசேகரனை அந்த நால்வரும் சோ்ந்து பலமாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகரன், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
அவா் அளித்த புகாரின் பேரில் ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் பி.சதீஷ்குமாா் உத்தரவின்பேரில், தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.எம்.சண்முகம் வழக்குப் பதிந்து நான்கு பேரில் பிரபு (40), சேட்டு (எ) ராமசாமி (40) ஆகிய இருவரை புதன்கிழமை கைது செய்தனா்.