தென் ஆப்பிரிக்கா அதிபரிடம் போலியான இனப்படுகொலை வீடியோவை காட்டினாரா ட்ரம்ப்? - வெடிக்கும் சர்ச்சை
'விளக்குகளை அணையுங்கள்' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகத்தின் விளக்குகள் அணைகிறது.
அங்கே, கிட்டத்தட்ட நான்கு நிமிட வீடியோ ஓடுகிறது.
அதில் 'எங்களுக்கு யார் அனுமதியும் தேவையில்லை. நீங்கள் யார் எங்களை அனுமதிக்க... நாங்கள் எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்கிறோம்' என்று ஒரு நாட்டின் நாடாளுமன்றக் காட்சி விரிகிறது. பின்னர், வரிசையாக வெள்ளை சிலுவைகள் கொண்ட சமாதியின் வீடியோ என அடுத்தடுத்த காட்சிகள் ஓடி முடிகிறது, அந்த வீடியோ.
'உங்கள் நாட்டில் வெள்ளை விவசாயிகள் மற்றும் வெள்ளையர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது' என்று ட்ரம்ப் படபடக்கிறார்.
அத்தனையையும் மெல்லிய முறுவலோடு எதிர்கொள்கிறார் அந்த மனிதர்.

அவர் தான் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசா. அந்த நாடாளுமன்றக் காட்சியும், அந்த சமாதி காட்சியும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை.
நடந்தது என்ன?
நேற்று முன்தினம் (மே 21) அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசோ இடையே நடந்த சந்திப்பு சுமூகமாகவே தொடங்கியது.
அப்போது ஒரு நிருபர், 'தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை விவசாயிகள் இனப்படுகொலை' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ரமபோசா, "தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இன படுகொலை நடந்தால், இந்த மூன்று ஜென்டில் மேன்களும் (தென் ஆப்பிரிக்க வெள்ளை அதிகாரிகள்) என்னுடன் வந்திருக்கமாட்டார்கள். என்னுடைய விவசாயத் துறை அமைச்சரும் (இவரும் வெள்ளையர் தான்) வந்திருக்கமாட்டார். அதிபர் ட்ரம்ப் அவர்களிடம் கேட்கட்டும்" என்று பதில் அளிக்கிறார்.
அப்போது ட்ரம்ப், 'தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் இனப்படுகொலை குறித்து ஆயிரமாயிரம் கதைகளை கேட்கிறோம். செய்திகளைப் படிக்கிறோம். ஆவணப் படங்களை பார்க்கிறோம்" என்று கூறியப் பின் தான், மேலே சொன்ன சம்பவம் நடந்தது.
அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரமபோசா, 'நான் இப்படி எதையும் பார்த்ததில்லை. இது எங்கே நடக்கிறது?' என்று கேட்க, ட்ரம்பின் பதில், 'தென் ஆப்பிரிக்காவில் தான்'.
அதற்கு பதிலளித்த ரமபோசா, 'எங்கள் நாட்டில் கொலைகள் நடக்கிறது தான். ஆனால், அதில் வெள்ளையர்கள் மட்டும் இறப்பதில்லை' என்று எடுத்துரைக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பணக்காரரான ஜோஹன் ரூபர்ட்டும் கலந்துகொண்டிருந்தார்.
பின்னர், ட்ரம்பிடம் பேசும்போது ரூபர்ட், "நீங்களும், நானும் 1980-களில் நியூயார்க்கில் வாழ்ந்து இருக்கிறோம். அப்போது இருந்த நிலைமை இப்போது இல்லை. அதுமாதிரி எங்கள் நாட்டிலும் எதிர்காலத்தில் மாறும்" என்று நம்பிக்கையாக நாட்டை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார்.
ஒருவழியாக, அந்த சந்திப்பு ஓரளவு சமூகமாகவே நடந்து முடிந்தது.
ஆனால், ட்ரம்பின் இந்த செய்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
தன்னை சந்திக்க வந்த ஒரு நாட்டின் அதிபரை ட்ரம்ப் இப்படி கையாண்டது தவறு என்று காரணம் கூறப்படுகிறது. இது முதல் தடவை அல்ல. கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இது தான் நடந்தது.
அதுவும், 'ட்ரம்ப் காட்டிய வீடியோ, பேசியவை உண்மையானதா?' என்று பார்த்தால், 'இல்லவே இல்லை' என்கிறார்கள்.
ட்ரம்பின் வீடியோ காட்சியில் வந்த சமாதி காட்சி, சமாதியே அல்ல. அது 2020-ம் ஆண்டு விவசாயி தம்பதிகள் கொலை நடந்தப்போது, அவர்களின் இறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம் அது.
மேலும், ட்ரம்ப் பேசிய வெள்ளை இன படுகொலை, 1,000 வெள்ளை விவசாயிகள் கொலை போன்ற அனைத்து தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாகவே இருந்திருக்கிறது. இதை CNN செய்தி நிறுவனத்தின் தென் ஆப்பிரிக்கா பத்திரிகையாளர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், பேராசியர்கள் என பலர் உறுதி செய்கிறார்.
ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் 1,000 விவசாயிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால், அது நிச்சயம் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போகாது. தென் ஆப்பிரிக்காவில் கொலைகள் நடக்கிறது. ஆனால், அதில் ஆப்பிரிக்கர்கள் விதிவிலக்கு அல்ல என்று ஆதாரத்துடன் பேசுகின்றனர்.
ஆக, ட்ரம்ப் கூறிய தகவல்கள் பொய்யானவை என்று தற்போது சர்ச்சைகள் எழுந்து வருகிறது.