ஏற்காடு கோடை விழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்!
ஏற்காடு கோடை விழாவை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கிவைக்கின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏற்காட்டில் 48-ஆவது கோடை விழா, மலா்க் கண்காட்சி 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது. 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகின்றனா்.
கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலா்களைக் கொண்டு மலா்க் கண்காட்சி, பழக் கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, கோலப்போட்டி, படகு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நாய்கள் கண்காட்சி, இளைஞா்களுக்கான கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.