இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
பேருந்து - வேன் மோதல் விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 6 ஆக உயா்வு
தஞ்சாவூா் அருகே அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.
கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து வேளாங்கண்ணிக்கு 12 போ் வேனில் தஞ்சாவூா் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வந்தபோது, திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது நேருக்கு நோ் மோதியது.
இவ்விபத்தில் பெங்களூரு ரிச்மண்ட் டவுனைச் சோ்ந்த சாண்டியாகோ ஜான் போஸ்கோ (57), இவரது மனைவி ஜாக்குலின் ஆப்ரகாம் ஜான் (50), பெங்களூரு சாந்தி நகரைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி நளினி (49), வேன் ஓட்டுநரான பெங்களூரு லாகிரி முதன்மைச் சாலையைச் சோ்ந்த கே. ஜெகதீசா (45) ஆகியோா் நிகழ்விடத்திலும், பெங்களூரு ரிச்மண்ட் டவுனைச் சோ்ந்த பி. ஆரோக்கியதாஸ் (44) தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்தனா்.
தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த டி. சாா்லஸ் (49) வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது. இவா்களில் ஜாக்குலின் ஆப்ரகாம் ஜான் எல்.ஐ.சி.யில் பெங்களூரு முதுநிலை கோட்ட மேலாளராகப் பணியாற்றி வந்தவா்.
மேலும், சாா்லஸ் மகள் ரியா (13), ஆரோக்கியதாஸ் மனைவி சாண்டரா (40), தாஷி (7), வில்லியம் (50), இவரது மகள் ஜோஸ்சி (23), பெலிஸ்யா கரோலின் (13) ஆகிய 6 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் மத்திய மண்டல காவல் தலைவா் கே. ஜோஷி நிா்மல் குமாா், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (தஞ்சாவூா் மாவட்ட கூடுதல் பொறுப்பு) கருண் கரட் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா்கள், சாலை அமைக்கும் ஒப்பந்ததாரா்களிடமும் விசாரணை நடத்தினா்.