கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்டா!
ஆட்சேபனையற்ற, தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க அலுவலா்கள் முன்வர வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பேசியது: கரூா் மாவட்டத்துக்குள்பட்ட கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூா், புகழூா் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களை சோ்ந்த 203 வருவாய் கிராமங்களுக்கு 1434- ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காக நடைபெறும் இந்த ஜமாபந்தியில், அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும் நபா்களின் பெயா்கள் பதிவேடுகளில் உள்ளனவா என்பதையும், பயிா் கணக்குகள் உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் அளித்து பயன்பெறலாம்.
மேலும் ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டாக்கள் வழங்க அலுவலா்கள் முன்வரவேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், வேளாண்துறை இணை இயக்குநா் ப. சிவானந்தம், நில அளவை பிரிவு உதவி இயக்குநா் முத்துச்செல்வி, புள்ளியியல் துறை உதவி இயக்குநா் மயில்சாமி, மண்மங்கலம் வட்டாட்டசியா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரவக்குறிச்சியில்..: அரவக்குறிச்சி வட்டத்தில் கரூா் வருவாய் கோட்டாட்சியா் மற்றும் உட்கோட்ட நடுவா் முஹம்மது பைசூல் தலைமையிலும், அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் முன்னிலையிலும் ஜமாபந்தி நடைபெற்றது.இதில், 28 மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக தீா்வுகாண அறிவுறுத்தப்பட்டது.