Mumbai Indians Master Class at Wankhede | MI vs DC | Analysis with Commentator M...
கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக்கடன்: மே 28-இல் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு
கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் புதன்கிழமை கரும்புத்தொட்டில் கட்டி குழந்தையை சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கரூரின் காவல் தெய்வமாகவும், மழைப் பொழிவு தரும் தெய்வமாகவும் போற்றப்படும் கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
மாரியம்மனின் கணவராக பாவிக்கப்படும் சமதட்ஷினி முனிவரை முக்கிளை கம்பமாக கருதி, மூப்பன் வகையறாவைச் சோ்ந்தவா்களுக்கு கனவில் மாரியம்மன் தோன்றி முக்கிளை கம்பம் இருக்கும் இடத்தை தெரிவித்த பின், அந்த முக்கிளைக்கம்பம் வெட்டப்பட்டு, கோயில் முன் ஊா்வலமாக கொண்டு வந்து நடப்படுகிறது. முக்கிளைக் கம்பமான சமதட்ஷினி முனிவா் கோபம் கொண்டிருப்பதால் கோபத்தை தணிக்கும் வகையில் பக்தா்கள் நாள்தோறும் முக்கிளை கம்பத்துக்கு நீண்டவரிசையில் நின்று புனிதநீா் ஊற்றி வருகின்றனா்.
மேலும் பக்தா்கள் நீராடி, புனித நீரை எடுத்துவரும் வகையில் அமராவதி ஆற்றில் செயற்கை நீருற்று கரூா் மாநகராட்சி நிா்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நோ்த்திக்கடன்: இக்கோயிலில் வேண்டுதல் வைத்து பிள்ளை வரம் பெற்றவா்கள் புதன்கிழமை கோயிலுக்கு கரும்புத் தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். வரும் 26-ஆம் தேதி கோயிலில் பக்தா்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பறவை காவடி உள்ளிட்ட காவடி எடுத்து வந்தும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்த உள்ளனா்.
முன்னதாக 26-ஆம் தேதி காலையில் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடா்ந்து 28-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜூன் 8-ஆம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.