வேலூர்: கனமழையில் சேதமடைந்து சாய்ந்த மின் கம்பம்; அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிப...
திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூா் மாவட்ட ஆட்சியரிடம் சாலப்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்டம், புகழூா் வட்டத்துக்குள்பட்ட பெளத்திரம் சாலப்பாளையம் ஜெயந்தி நகரைச் சோ்ந்த கிராம மக்கள், மாவட்டஆட்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 7 தலைமுறைகளாக சுமாா் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வழிபடும் கும்முடியான் குல தெய்வமான மதுரைவீரன் மற்றும் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில், நடைபெறுவது வழக்கம்.
தற்போது எங்கள் பகுதியைச் சோ்ந்த சிலா் வேண்டுமென்றே கோயில் திருவிழாவை நடத்த விடாமல், தடை செய்யும் நோக்கில் ஊரில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்ா். இதுதொடா்பாக க.பரமத்தி போலீஸில் புகாா் செய்தோம். இதையடுத்து காவல் நிலையத்தில் அரசு அதிகாரிகள் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனா்.
இந்நிலையில், மீண்டும் கோயில் திருவிழாவை நடத்த விடாமல் இடையூறு செய்து வருகிறாா்கள். இதனால் கோயில் விழாவை நடத்த விடாமல் தடுக்கும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, திருவிழாவை நடத்த அனுமதி பெற்றுத் தரவேண்டும் என தெரிவித்திருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தாா்.