நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வேலம்பாடியில் 32 குடியிருப்புகள்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலம்பாடியில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
கரூா் மாவட்டம், வேலம்பாடியில் 32 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பு நானூறு சதுர அடி பரப்பளவில் ரூ. 9.23 லட்சம் மதிப்பீட்டில் படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வசித்து வரும் வீடற்ற நகா்ப்புற ஏழைகள் பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
வேலம்பாடியில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் தங்கவேல், 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில் கரூா் எம்.பி. ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேலும், பள்ளப்பட்டி நகா்மன்றத் தலைவா் முனவா் ஜான், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நாமக்கல் கோட்ட நிா்வாக பொறியாளா் குமாரதுரை, கரூா் உட்கோட்ட உதவி நிா்வாக பொறியாளா் தமிழரசு, உதவிப் பொறியாளா் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.