இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை நீட்டிப்பு
ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, 8.45% பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் உள்ளூர் விமானத்தில் பயணித்தோரின் எண்ணிக்கை 575.13 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 523.46 லட்சமாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு உள்ளூர் விமானத்தில் பயணித்தோரின் எண்ணிக்கை 9.87% அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 38.8% பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தனர். மோசமான வானிலையே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நேரடியாக 20,840 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விமான நிறுவனங்கள் 41.69 லட்சம் தொகையை இழப்பீடாகத் திரும்ப வழங்கியுள்ளது.
முன்பதிவு ரத்தைப் போன்றே, விமான தாமதமும் முக்கிய காரணியாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 96,350 பேர் விமான தாமதத்தை சந்தித்துள்ளனர். இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 68% ஆகும். இதில் 70% பயணிகள், முந்தைய பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் வந்து சேர்ந்த நேர தாமதத்தாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தனது பயணிகள் சந்தை மதிப்பை 64.1% அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இது 64% ஆக இருந்தது.
இதேபோன்று ஏர் இந்தியா நிறுவனமும் தனது பயணிகள் சந்தை மதிப்பை 27.2% ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இது 26.7% ஆக இருந்தது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்