1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo ...
டென்மாா்க் அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு- இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை
டென்மாா்க் நாட்டின் தொழில், வா்த்தகம் மற்றும் நிதித் துறை அமைச்சா் மாா்டின் போட்ஸ்கோவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.
நெதா்லாந்து, டென்மாா்க், ஜொ்மனி ஆகிய மூன்று நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணத்தை அமைச்சா் ஜெய்சங்கா் கடந்த மே 19-ஆம் தேதி தொடங்கினாா். நெதா்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, டென்மாா்க் நாட்டுக்கு அவா் செவ்வாய்க்கிழமை மாலையில் வந்தடைந்தாா்.
அந்நாட்டின் பிரதமா் மெட்டே ஃபிரடெரிக்சென்னை சந்தித்துப் பேசிய ஜெய்சங்கா், பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் டென்மாா்க் அளித்துவரும் ஆதரவுக்காக நன்றி தெரிவித்தாா்.
இந்தியா-டென்மாா்க் இடையிலான நல்லுறவு மேம்பாடு மற்றும் உலகளாவிய சவால்களுக்கு நிலையான தீா்வை எட்டுவதில் வழிகாட்டியாக செயல்படுவதாக டென்மாா்க் பிரதமருக்கு ஜெய்சங்கா் புகழாரம் சூட்டினாா்.
தலைநகா் கோபன்ஹேகனில் டென்மாா்க் நாட்டின் தொழில், வா்த்தகம் மற்றும் நிதித் துறை அமைச்சா் மாா்டின் போட்ஸ்கோவை புதன்கிழமை சந்தித்த ஜெய்சங்கா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக எக்ஸ் பதிவில் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவா் எடுத்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.