கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில் முக்கிய பயங்கரவாதிகள் சிலா் கொல்லப்பட்டனா். ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் தீவிர கண்காணிப்பை மீறி தப்பித்துவிட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறினா்.
கடந்த மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் 25 பேரும் உள்ளூா்வாசி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இருப்பினும், 4 முதல் 6 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அவா்கள் இப்போது தப்பியிருந்தாலும் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டு வரும் தீவிர சோதனையில் விரைவில் சிக்குவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஒரு மாதமாக காஷ்மீா் முழுவதும் பரவலாக பாதுகாப்புப் படையினா் சோதனை நடத்தி வருகின்றனா். இதில் சில பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. 1,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 100-க்கும் மேற்பட்டோா் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
பயங்கரவாதிகளுடன் முன்பு தொடா்பில் இருந்த குற்றச்சாட்டில், சிறைத் தண்டனை பெற்று விடுதலையான இளைஞா்கள் சிலரையும் பாதுகாப்பு படையினா் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து பஹல்காம் உள்பட ஜம்மு-காஷ்மீருக்கு கோடை சுற்றுலா செல்லவிருந்த பயணிகள் பயணத்தை ரத்து செய்துவிட்டனா். இதனால் அங்கு சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
குறிப்பாக பஹல்காம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள சாலையோர கடைகள், விடுதிகள் மற்றும் வாடகை காா் ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.
1990-களில் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவியபோதும் பஹல்காம் வெறிச்சோடியதில்லை எனக் கூறிய அவா்கள் தற்போது உள்ளூா் பயணிகள்கூட வர அச்சப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனா்.
இந்த நிலை நீண்ட நாள்கள் நீடித்தால் தங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் உள்ளூா்வாசிகள் கோரிக்கை வைத்தனா்.
இந்நிலையில், ஜூலை 3-ஆம் தேதி தொடங்கவுள்ள அமா்நாத் யாத்திரை மூலம் காஷ்மீா் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்புவதாக அவா்கள் தெரிவித்தனா்.