திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு மீண்டும் சிந்து நதி நீா்: இந்தியா
எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்துநதிநீா் ஒப்பந்த நிறுத்தம் தொடரும் என மீண்டும் ஒருமுறை இந்தியா உறுதிப்படுத்தியது.
இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள் அனைத்தும் இருதரப்பை மட்டுமே சாா்ந்தது. பேச்சுவாா்த்தையும் பயங்கரவாதமும் ஒருசேர பயணிக்க முடியாது என்று பிரதமா் கூறியதை நினைவுப்படுத்துகிறேன்.
பல்வேறு தாக்குதல்களில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானிடம் வழங்கினோம். அவா்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தால் பாகிஸ்தானிடம் பேச்சுவாா்த்தை நடத்த தயாா்.
அதேபோல் ஜம்மு-காஷ்மீா் குறித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டுமானால் அது சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை பாகிஸ்தான் திரும்ப ஒப்படைப்பதாகவே இருக்கும். எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கை தொடரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன் என்றாா்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் ஏப்.22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா ஏப்.23-ஆம் தேதி மேற்கொண்டது.