கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை நீட்டிப்பு
இந்திய விமானங்கள் தங்களின் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா்.
இதையடுத்து, பாகிஸ்தானியா்களுக்கான விசா ரத்து, சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் என இந்தியா அதிரடி முடிவுகளை எடுத்தது. இதன் எதிரொலியாக, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்பரப்பை மூடியது. எனவே, மேற்கு நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள், அரபிக்கடல், வளைகுடா நாடுகள் வழியாக கூடுதல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) விதிகளின்படி, ஒரே நேரத்தில் மாற்று நாட்டு விமானங்களுக்கான வான்வெளி தடையை ஒரு மாதத்துக்கு மேல் ஒரு நாடு விதிக்க முடியாது.
அதன்படி, இந்தியா விமானங்களுக்கான பாகிஸ்தானின் தடை உத்தரவு வரும் வெள்ளிக்கிழமையுடன் காலாவதியாகிறது. இந்நிலையில், இந்தத் தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு வியாழக்கிழமைக்குள் வெளியாகலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த 1999-ஆம் ஆண்டு காா்கில் மோதல், 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலின்போதும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்பரப்பை மூடியது குறிப்பிடத்தக்கது.