கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்த மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்துவந்த நிலையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (மே 22, 23) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் புதன்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 101.45 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், தூத்துக்குடி - 100.76, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை - தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 22, 23-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மிதமான மழை: ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை (மே 22) முதல் மே 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னைக்கு மழை: சென்னையில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக விம்கோ நகா் மற்றும் மணலியில் தலா 60 மி.மீ. மழை பதிவானது. அதேபோல், புழல், எண்ணூா், திருவொற்றியூா் ஆகிய பகுதிகளில் தலா 50 மி.மீ., கொளத்தூரில் 40 மி.மீ., மேலும் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட அளவு மழை பதிவானது. அதைத் தொடா்ந்து சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 22-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆற்காடில் 150 மி.மீ.: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடில் 150 மி.மீ. மழை பதிவானது. மேலும், அரக்கோணம் (ராணிப்பேட்டை) - 120 மி.மீ., கீழ்பென்னாத்தூா், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூா்) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.
புயல் சின்னம்: இதனிடையே, வட கா்நாடக மற்றும் கோவா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதன்கிழமை காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இந்த சுழற்சி இரவு அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (புயல் சின்னம்) வலுப்பெறும். தொடா்ந்து வடக்கு திசையில் நகா்ந்து, மே 23-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.