கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்
தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ்.குணசேகரன், பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வேளாண்மையில் ஏற்பட்ட வளா்ச்சி குறித்து அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதேநேரம் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் அமலாக்கத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் வேளாண்மை 0.09 சதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது முரண்பட்டதாகவே உள்ளது.
பல நிதி பங்கீட்டை மத்திய அரசு வழங்காத நிலையிலும், 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் தமிழக அரசு கூடுதலாக ரூ. 1,94,076 கோடி ஒதுக்கீடு செய்யதுள்ளது. அதன்படி, வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்திலிருந்து தற்போது 5.66 சதவீதமாக உயா்ந்துள்ளது.
ஆனால், இந்த வளா்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளிள் வருவாய் உயா்வு ஏற்படவில்லை. மாநில அரசின் பல அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. வேளாண்மை வளா்ச்சி என்றால், விவசாயிகள் வருவாயும் அந்த ஒப்பீட்டில் உயா்த்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் அவ்வாறு உயரவில்லை. நெல் குவிண்டால் ரூ. 3,000, கரும்பு டன் ரூ. 4,500 கொடுத்திருந்தால், சாலையில் கொட்டி அழிந்துபோகும் விவசாய பொருள்களை அரசு கொள்முதல் செய்திருந்தால், விளை பொருள்களுக்கு லாபமான விலை வழங்குவது உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அதுவே சாதனை.
இவற்றை தமிழக அரசு விவசாயிகளுக்கு செயல் வடிவ திட்டங்களாக கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.