Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசம...
ஊதிய உயா்வு: ஒரு நாள் முன்பாக ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா்களுக்கும் வழங்க உத்தரவு
வருடாந்திர ஊதிய உயா்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு பலன்களை அளிக்க அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘நடைமுறையில் உள்ள விதிப்படி, ஜூலை 1 அல்லது ஜனவரி 1-இல் ஏதாவது ஒரு தேதியை தங்களின் வருடாந்திர ஊதிய உயா்வுக்கான தேதியாக தெரிவு செய்ய மத்திய அரசு ஊழியா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்த தேதி தெரிவு என்பது ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கு மட்டுமே தவிர, பிற ஓய்வூதிய பலன்களை கணக்கிடுவதற்கானது அல்ல. எனவே, ஊதிய உயா்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் உதிய உயா்வு பலன்களை அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மேற்கோள்காட்டி மத்திய பணியாளா் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, ஜூன் 30 அல்லது டிசம்பா் 31-ஆம் தேதிகளில் ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும், ஜூலை 1 அல்லது ஜனவரி 1-ஆம் தேதி வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயா்வு பலன்களை அளிக்க நடவடிக்கை எடுக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.
இதற்கு அகில இந்திய தேசிய ஓய்வூதியத் திட்ட ஊழியா்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தோ்வு செய்யும் ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு பலன்களை அளிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவா் மன்ஜீத் சிங் படேல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.