ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்
இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆலையைக் கட்டும் பணியை சுசூகி மோட்டார்சைக்கிள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து 2027ஆம் ஆண்டில் ஆலையில் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக ரூ. 1200 கோடி முதலீடு செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் இரண்டாவது ஆலையைத் தொடங்குவதற்கானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஹரியாணாவின் கார்கோடா பகுதியில் ரூ. 1200 கோடி முதலீட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமையவுள்ளது.
இதில் முதல் 25 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பகட்ட உற்பத்திக்கும், மற்றோரு 25 ஏக்கர், பசுமையான இடமாக வைத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டில் ஆலை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்றும் ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஹரியாணாவின் குருகிராம் பகுதியில் 2006ஆம் ஆண்டு முதல் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 5.4 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.