மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா்வு சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாள்களில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்று விசாரித்தாா்.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். முகாமில், மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளா் பழனி மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.