விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்
Doctor Vikatan: `பித்தப்பை கற்கள்' அறுவை சிகிச்சையைத் தவிர்க்க சித்த மருந்துகள் உதவுமா?
Doctor Vikatan: என் வயது 40. கடந்த சில வருடங்களாக பித்தப்பை கற்கள் பாடாய்ப் படுத்துகின்றன. ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டும் குணமாகவில்லை. மருத்துவர் பித்தப்பை கற்களை நீக்குவதுதான் தீர்வு என்கிறார். பித்தப்பை கற்களை குணமாக்க, சித்த மருத்துவத்தில் ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி

பித்தப்பை கற்கள் ஏன், எப்படி உருவாகின்றன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் பித்த நீரைச் சுரக்கிறது. இது தினமும் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் அளவு வரை சுரக்கும். இந்தப் பித்த நீரானது கல்லீரலில் இருந்து பித்தப்பைக்குச் சென்று சேமிக்கப்படும்.
பித்தப்பை என்பது சிறிய பலூன்போன்ற பை. இது கல்லீரலுக்குப் பக்கத்தில் இருக்கும். பித்தப்பையின் கொள்ளளவு 80 மில்லி அளவுக்கு இருக்கும். அங்கே சேரும் பித்தநீரானது சற்று நேரம் அங்கேயே இருந்து, அடர்த்தியாகி, நாம் சாப்பிடுவதற்காகக் காத்திருக்கும்.
நாம் சாப்பிட்டதும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரத்துக்குள், அந்த உணவிலுள்ள கொழுப்பையும் புரதத்தையும் செரிப்பதற்கு, பித்த நீரானது பித்தப்பையிலிருந்து சிறுகுடலுக்குப் போகும். இது சகஜமாக நடக்கும் விஷயம்.
பித்தப்பையில் கற்கள் உருவாகும் தன்மை என்பது சிலருக்கு இயல்பாகவே இருக்கும். பரம்பரையாகத் தொடரும். முறையற்ற உணவுப்பழக்கம் அல்லது பித்தப்பை காலியாகும் செயலில் உள்ள பிரச்னை காரணமாகவும் கற்கள் உருவாகலாம்.
பித்தப்பையில் அதிக நேரம் பித்த நீர் தங்கும்போது, அதிலுள்ள உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகலாம்.
உதாரணத்துக்கு, பால் காய்ச்சும்போது சாதாரணமாகக் கொதிக்க வைப்பதற்கும் நீண்ட நேரம் சுண்டவைத்துக் காய்ச்சுவதற்கும் வித்தியாசம் இருக்குமல்லவா.
சுண்டக் காய்ச்சும்போது பால் கெட்டியாகி, கொழுப்பெல்லாம் பால் ஏடாகப் படியுமல்லவா? அப்படித்தான் பித்த அமில நீரானது நீண்ட நேரம் பித்தப்பையில் தங்குவதால், கெட்டியாகி, திரண்டு, பித்தப்பை கற்களாக உருவாகும். ஆக, பித்தப்பை கற்கள் என்பவை, பித்தநீர் படிமம் மற்றும் கொழுப்பின் சேர்க்கையே.

பித்தப்பை கற்கள், மணல், ரவை அளவில் குட்டிக்குட்டியாக நிறைய இருக்கலாம் அல்லது பெரிதாக ஒரே கல்லாகவும் இருக்கலாம்.
இவற்றில் ஒற்றைக் கல்தான் அடிக்கடி தொல்லை கொடுக்கக்கூடியது. பித்தப்பையானது சுருங்கி, விரியக்கூடிய தன்மை கொண்டது.
கல்லானது பித்தப்பையின் உள் சுவரை உரசும்போது வலியை ஏற்படுத்தும். பித்தப்பை காலியானதும் அந்தக் கல், பாதையை அடைத்துக்கொள்ளலாம். பித்தப்பையில் வீக்கத்தை ஏற்படுத்தும் கொலேசிஸ்டைட்டிஸ் (Cholecystitis) பிரச்னையை உண்டாக்கலாம்.
இது அறிகுறி வகையில் வரும். சிலருக்கு பித்தப்பை கற்கள் எந்தப் பிரச்னையையும் காட்டாது. இவர்கள் அறிகுறியற்ற வகையில் வருவார்கள்.
சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள் என்பதை வைத்தே பித்தப்பை கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா என்று தீர்மானிக்கப்படும்.
பித்தப்பை கற்கள் தொல்லை கொடுக்காதவரை அதற்கு அறுவைசிகிச்சை தேவையில்லை. பித்தப்பை கற்கள் அதீத வயிற்றுவலியை ஏற்படுத்தக்கூடியவை. சிலருக்கு சாப்பிட்ட உடனே வயிற்று வலி வரும். பொறுக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும்போது அதற்கு மருத்துவ சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.
அவையும் பலன் தராதபோதுதான் அதற்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அறிகுறிகளைக் காட்டாமலிருக்கும் பித்தப்பை கற்கள் கூட திடீரென வீரியமாகி, பித்தநீரை வடியவிடாமல் தடுக்கும். அதனால் சிலருக்கு 'அப்ஸ்ட்ரக்டிவ் ஜாண்டிஸ்' (Obstructive jaundice ) எனப்படும் காமாலை ஏற்படும். இது எல்லோருக்கும் வரும் என்று சொல்ல முடியாது, எப்போது வரும் என்றும் சொல்ல முடியாது.

அறிகுறிகள் இல்லாவிட்டாலும் வருடம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து, கற்களின் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சை என்றாலே, அதன் பிறகு உணவு செரிப்பதில் பிரச்னை ஏற்படும் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. அதில் உண்மை கிடையாது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்புள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். பித்தப்பை கற்களை அலட்சியம் செய்வதால் முன்னரே குறிப்பிட்டபடி காமாலை, பித்தப்பை சுவர்களில் அழற்சி, பசியின்மை, வயிற்று உப்புசம், அஜீரணம், வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வரலாம்.
நாள்பட்ட, பெரிய கற்கள் இருந்து, கவனிக்காமல் விட்டால், அவை நாளடைவில் கணையத்தையும் பாதிக்கலாம். எனவே, பித்தப்பை கற்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது அவசியம்.
பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் விரதமிருக்கக்கூடாது. சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். பித்தப்பை கற்களை சித்த மருத்துவத்தில் குணப்படுத்த முடியும். சம்பந்தப்பட்ட நபரின் வயது, உணவுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றைப் பொறுத்து சித்த மருத்துவ சிகிச்சையின் பலன் வேறுபடும்.
பித்தநீர் சுரப்பு அளவோடு இருந்தால் கற்கள் உருவாகாது. ஒரே கல்லாக, பெரிதாக இருப்பதைவிட, நிறைய குட்டிக்குட்டி கற்கள் என்றால் சிகிச்சை சீக்கிரம் பலனளிக்கும். பித்த நீர் சுரப்பை அளவோடு வைத்துக்கொள்ள தனியா, சீரகம், வெந்தயம்- தலா 50 கிராம் அளவு எடுத்து வெறும் கடாயில் வறுத்து, மிக்சியில் நைசாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில், இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கவிடவும்.
அந்தத் தண்ணீரை குடித்துவிடலாம். பொடியை நேரடியாகவும் சாப்பிட்டும் தண்ணீரோ, மோரோ குடித்துவிடலாம். இது கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும்.

ஏலாதி சூரணம், சிலாசத்து பற்பம், குங்கிலிய பற்பம், நண்டுக்கல் பற்பம், நெருஞ்சில் குடிநீர், கீழாநெல்லி கற்கம், மூக்கிரட்டை குடிநீர் என பித்தப்பை கற்கள் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் நிறைய நல்ல மருந்துகள் உள்ளன.
இவை கல்லீரலில் இருந்து வரும் சுரப்பை முறைப்படுத்தும். கற்கள் இருந்தால் கரைக்கும். கற்களால் வரும் வலி, உப்புசம் போன்றவற்றைக் குறைக்கும்.
இந்த மருந்துகளை நீங்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்களுக்கு பித்தப்பை கற்கள் எந்த அளவு இருக்கின்றன, அவற்றின் அறிகுறிகள் எப்படியிருக்கின்றன என்பதையெல்லாம் பொறுத்தே சிகிச்சை பரிந்துரைக்கப்படும். எனவே, சித்த மருத்துவத்தில் தீர்வு வேண்டும் என்றால் முறைப்படி மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுவதுதான் சரி.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.