`CT ஸ்கேன் செய்தால் புற்றுநோய் வருமா? - பகீர் கிளப்பிய ஆய்வும் மருத்துவர் தரும் விளக்கமும்!
மருத்துவ உலகின் மகத்தான வளர்ச்சியில் ஒன்று CT ஸ்கேனிங் முறை. இது அறுவை சிகிச்சை ஏதும் செய்யாமலே மனித உடலின் உள் இருக்கும் பிரச்னையையும், அதன் தன்மையையும் கணினியில் திரைப்போட்டு காட்டிவிடும். இதனால் அறிகுறி ஏதுமின்றி வரும் பல்வேறு நோய்களை குணமாக்க பெரிதும் உதவி வருகிறது.
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள JAMA இன்டர்னல் மெடிசன், இந்த CT ஸ்கேனை எடுப்பவர்களில் 94% பேருக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என அதிர்ச்சியளிக்கும் ஆய்வு ஒன்றை வெளியிட்டது. நம்மில் பலருக்கும் அந்த ஆய்வு பயத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் நாமோ, நம் குடும்பத்தை சேர்ந்தவர்களில் யாரோ, ஏதோ ஒரு காரணத்திற்காக CT ஸ்கேனை செய்திருப்போம். அப்படியானால் நமக்கும் எதிர்காலத்தில் புற்றுநோய் வந்துவிடுமா என்ற கவலைதான் அது. இப்படி பயத்தை ஏற்படுத்திய அந்த ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன; CT ஸ்கேன் செய்தால் எதிர்காலத்தில் புற்றுநோய் வருமா என்பதை விளக்குகிறார், கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் டாக்டர் ராஜேஷ் கர்.

’’CT (computer Tomography) ஸ்கேன் என்பது, கிலோ வோல்ட் கதிரியக்க கதிர்வீச்சை உட்செலுத்தி படம் பிடிப்பதாகும். இது கண்களால் கானமுடியாத உட்புற உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கண்டறிய ஸ்கேன் செய்யும் முறை. டாக்டர்கள் குறிப்பிடாமல் எந்த ஸ்கேனிங் சென்டரிலும் CT ஸ்கேன் செய்ய மாட்டார்கள். சிகிச்சைக்குச் சென்ற உடனேவும் மருத்துவர்கள் CT ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கமாட்டார்கள். தேவையிருப்பின் மட்டுமே CT ஸ்கேனிற்கு பரிந்துரைப்பார்கள்.
இந்த CT ஸ்கேன் செய்து கொள்வதால் புற்றுநோய் வருமா என்றால், அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், CT ஸ்கேன் செய்து கொள்ளும் அனைவருக்குமே புற்றுநோய் வருமா என்றால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. அவை கதிரியக்க கதிர்களால் உறுப்பு செல்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை பொறுத்தது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட உறுப்பு செல்கள், உட்செலுத்தப்பட்ட கதிர்வீச்சை பொறுத்து குறிப்பிட்ட காலத்தில் இயல்பு நிலையை அடைவதோ, புதுப்பித்துக் கொள்வதோ நிகழ்ந்து விடும். அப்படி நிகழாதவர்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அதிலும் மெகா வோல்ட்(1000V) க்கு மேல் கதிர்வீச்சை உட்செலுத்தினால்தான் செல் சிதைவே நிகழும். அப்படி சிதைந்த செல்கள் குணமாகலாம், அல்லது பாதிப்பை ஏற்படுத்தலாம், அல்லது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அந்த பிரச்னை அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படலாம். இந்த மெகா வோல்ட் கதிர்வீச்சுதான், புற்றுநோயை குணமாக்கும் ரேடியோ தெரபி மருத்துவ முறையிலும் பயன்படுத்தப்படுகிறது. எந்த கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக சொல்லப்படுகிறதோ அதே கதிர்வீச்சுதான் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையிலும் நமக்கு உதவுகிறது.

அந்த ஆய்வு RATRAN என்ற மென்பொருள் மூலம் செய்யப்பட்டது. (RATRAN என்பது கதிர்வீச்சு பரிமாற்றம் மற்றும் அவற்றால் செல்களுக்கும் ஏற்படும் தூண்டுதலை, பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கணக்கிடுவதற்கான ஒரு மென்தொழில்நுட்பம் ஆகும்) அந்த மென்பொருள் எந்த அளவில் கதிர்வீச்சு உட்செலுத்தப்படுகிறது, அந்த அளவு கதிர்வீச்சு உட்செலுத்தினால் எந்தவகை புற்றுநோய்கள் வரலாம் என்பதை மட்டுமே கணக்கிட்டு சொல்லும். தவிர, அவை நிச்சயம் வரும் என்பது சாத்தியமல்ல.
Leukemia Cancer, (இரத்த திசுக்களில் ஏற்படும் புற்றுநோய்), Sarcoma Cancer (தசை போன்ற மென்மையான திசுக்களில் ஏற்படும் புற்றுநோய்), Thyroid cancer (தைராய்டு சுரப்பியில் உருவாகும் புற்றுநோய்), lymphoma cancer (நிணநீர் மண்டலத்தில் உருவாகும் புற்றுநோய் போன்ற புற்றுநோய் வகைகள்தான் கதிர்வீச்சு உட்செலுத்தலால் ஏற்படக்கூடிய வகைகள். ஏனென்றால், இவை மிகவும் மென்மையான திசுக்களை உடைய செல்கள். அவை எளிதில் சிதைந்து விடும்.
அந்த முடிவிலும் எதிர்காலத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தான் இருக்கிறதே தவிர நிச்சயம் வரும் என குறிப்பிடவில்லை.
குழந்தைகளுக்கு எளிதில் CT ஸ்கேனை பரிந்துரை செய்யமாட்டோம். CT ஸ்கேன் மட்டும் அல்ல எந்த வித கதிரியக்க கதிர்வீச்சு சிகிச்சையையும் குழந்தைகளுக்கு பரிந்துரை செய்யமாட்டோம். மிக மிக அவசியம், உயிரைக் காப்பாற்ற வேண்டிய விஷயம், தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால் மட்டுமே CT ஸ்கேனை பரிந்துரைப்போம். அப்படி ஸ்கேன் செய்கையில் அவர்களுக்கும் செல் சிதைவு ஏற்படும் அவையும் குறிப்பிட்ட காலத்தில் இயல்பு நிலையை அடையும். ஆனால், எலும்புப்பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அவை குணமாக நீண்ட காலம் ஆகலாம்.
இந்த ஆய்வு முடிவுகளை கண்டு பயப்பட வேண்டாம். இது மென்பொருள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதே. அந்த முடிவிலும் எதிர்காலத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தான் இருக்கிறதே தவிர நிச்சயம் வரும் என குறிப்பிடவில்லை. தேவை இருப்பின் டாக்டர் பரிந்துரையின் பேரில் அதற்கேற்ற கால இடைவேளி விட்டு CT ஸ்கேன் செய்தால் கதிர்வீச்சு உட்செலுத்தலால் வரும் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பைக் குறைக்கலாம்’’ என்கிறார் டாக்டர் ராஜேஷ் கர்.