கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற்றும் அம்மாநிலத்தின் தெற்குப் பகுதியிலுள்ள உள் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் காலை முதல் பெய்து வந்த கனமழை குறைந்திருப்பதாகக் கூறப்பட்டாலும், அம்மாவட்டத்துக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை தொடர்ந்து நிலுவையிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், பெங்களூரில் காலை 8.30 மணி முதல் 2.30 மணி வரையில் 0.4 மி.மீ. அளவிலான மழை பதிவானதாகக் கூறப்படுகிறது. கனமழை பாதிப்புகளினால் பெங்களூரில் 3 பேர் உள்பட கர்நாடகத்தில் மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
பலத்த சூரைக்காற்றுடன் கூடிய கனமழை இன்று இரவும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உத்தர கன்னடா, உடுப்பி, தக்ஷின கன்னடா, கொடகு, சிவமோகா, சிக்கமகளூரு மற்றும் ஹசன் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழை ஆகிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அந்த 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தலைநகர் பெங்களூரைப் பொறுத்தவரையில், அங்கு நிலைமை தற்போது சீராகி, மழைமேகங்கள் வடமேற்கு பெங்களூரை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வங்கக் கடலில் நிலநடுக்கம்...!