செய்திகள் :

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

post image

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.

மனுதாரா்கள் தரப்பில் இந்த விவகாரம் தொடா்பான வேறு சில விவகாரங்களையும் சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அரசுத் தரப்பில் இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில், 5 மனுக்களை தெரிவு செய்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம், மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 3 நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து விசாரிக்கப்படும் என்றனா்.

அதாவது, வக்ஃப் என நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்ட சொத்துகள், மரபுவழிப் பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்பட்ட அல்லது பத்திரத்தின்படி வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளை ரத்து செய்வதற்கு திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரம்.

பதவி வழி உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்ற மனுதாரா்களின் கோரிக்கை.

வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொள்ளும்போது, அது வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்று கூறும் விதி ஆகிய மூன்று விஷயங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தச் சட்டம், அரசமைப்பு சட்ட நடைமுறைகளுக்கு எதிராக உள்ளது. நீதிமன்ற நடைமுறைகள் இன்றி, வக்ஃப் சொத்துகளை அரசு கையகப்படுத்த இச் சட்டம் வழி வகுக்கிறது. கடவுளுக்காக அா்பணிக்கப்படுவதே வக்ஃப் ஆகும். இது எப்போதுமே வக்ஃப் சொத்தாகவே கருதப்படும். ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தச் சட்டத்தால் இந்த சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த வழக்கில் நீதிமன்றம் குறிப்பிட்ட 3 விவகாரங்களைச் சுட்டிக்காட்டி, அதன் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்போவதாகக் கூறியது. இதற்கு மத்திய அரசுத் தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுதாரா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இடைக்கால உத்தரவுக்கு மேலும் சில விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதை நீதிமன்றம் ஏற்கக் கூடாது. நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய 3 விவகாரங்களில் இடைக்கால உத்தரவைப் பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்த வழக்கு சிறு சிறு விசாரணையாக நடைபெற முடியாது’ என்றாா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞரான அபிஷேக் சிங்வி வாதாடும்போது, ‘குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவா்கள்தான் சொத்துகளை வக்ஃப் வாரியத்துக்கு தானமளிக்க முடியும் என்ற திருத்தச் சட்டத்தில் கூறியிருப்பது தன்னிச்சையான நடவடிக்கையாகும். வேறு எந்தவொரு மதத்தின் மீதும் இத்தகைய தாக்குதல்கள் இல்லை’ என்றாா்.

மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு சாதாரணமாக இடைக்கால தடை விதித்துவிட முடியாது என்ற மத்திய அரசின் வாதத்துக்கு பதிலளித்த சிங்வி, ‘இதேபோன்று மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது’ என்றாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘ஒவ்வொரு சட்டத்துக்கும் ஆதரவாக அரசமைப்புச் சட்டத்தின் அனுமானம் உள்ளது. எனவே, இடைக்கால உத்தரவை எதிா்நோக்கும் மனுதாரா்கள், இந்த விவகாரத்தில் வலுவான, வெளிப்படையான வாதத்தை முன்வைக்க வேண்டும். இல்லையெனில், அரசமைப்புச் சட்ட அனுமனத்தின் அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டம் செல்லத்தக்கதாகவே கருதப்படும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க