கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!
ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலங்கள் அணியும் ஆடைகளும் அணிகலன்களும் பரவலாக பேசப்படுவதுண்டு.
இந்த ஆண்டு வளர்ந்துவரும் இந்திய நடிகையும் மாடலுமான ருச்சி குஜ்ஜார், தனது ஃபேஷன் மூலம் உலகம் முழுவதும் வைரலாகியிருக்கிறார்.
கேன்ஸ் 2025 ரெட் கார்பெட்டில், இந்திய கைவினைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக தங்க திருமண லெஹங்கா அணிந்து சென்றுள்ளார் ருச்சி. ஆடையில் உள்ள எம்பிராய்டரி, கண்ணாடி வேலைப்பாடுகளைவிட, அவர் அணிந்து சென்ற நெக்லஸ்தான் அவரைப் பேச்சு பொருளாக்கியுள்ளது.
நெக்லஸில் உள்ள வட்டமான அமைப்பில் பெருமையாக பதக்கம் போல பிரதமர் மோடியின் முகத்தைப் பதித்துச் சென்றுள்ளார் ருச்சி.
இதுகுறித்து நியூஸ் 18 சேனலுக்கு பேட்டி அளித்த அவர், "இந்த நெக்லஸ் வெறும் நகை அல்ல, இது வலிமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது.
இதை கேன்ஸுக்கு அணிந்துவருவதன் மூலம் நான் பிரதமர் மோடியை பெருமைபடுத்த நினைக்கிறேன், ஏனெனில் அவரது தலைமைதான் இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளது." எனப் பேசியுள்ளார்.

ருச்சி இந்திய பொழுதுபோக்கு துறையில் தடம் பதிக்க போராடிவரும் ஒரு இளம் நடிகை. ஜெய்ப்பூரில் உள்ள மகாராணி கல்லூரியில் படித்த அவர், சினிமா கனவுகளைத் தேடி மும்பைக்கு குடியேறியிருக்கிறார்.
ஜப் து மேரி நா ரஹி மற்றும் ஹெலி மே சோர் போன்ற மியூசிக் வீடியோக்களில் தோன்றியுள்ள இவர், 2023 மிஸ் ஹரியானாவும் கூட!
குஜ்ஜார் குடும்பங்கள் மிகவும் கட்டுப்பாடு மிக்கவை என்றும், சமூக தடைகளை உடைத்து சாதிக்க விரும்புவதாகவும் ருச்சி கூறியுள்ளார். "எங்கள் சமூகத்தில் இருந்து பாலிவுட்டில் இவ்வளவு தூரம் வந்த ஒரே பெண் நான்தான். பாலிவுட்டில் இருக்கும் பெண்களைப் பற்றி மக்கள் சிந்தனையில் இருப்பதை மாற்ற முடியாது. ஆனால் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக போராடிய பெண்ணாக எங்கள் சமூக பெண்களுக்கு உத்வேகமாக இருக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.