ஏலத் தொகையில் 31% அபராதமாக அளித்த திக்வேஷ் ரதி..!
லக்னௌ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதியின் மொத்த அபராதத் தொகை ரூ.9 லட்சத்தைக் கடந்துள்ளது.
தில்லியைச் சேர்ந்த 25 வயதாகும் சுழல்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி ஐபிஎல் போட்டிகளில் லக்னௌ அணிக்காக விளையாடி வருகிறார்.
சிறப்பாக பந்துவீசும் திறமைக் கொண்ட இவர் எதிரணியினரின் விக்கெட்டை எடுத்தபிறகு அவர்களின் பெயரை குறிப்பெழுதுவது போல் (நோட்புக் செலிபிரேஷன்) கொண்டாடி வருகிறார். சில சமயங்களில் வீரர்களை முறைப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்தமாதிரியாக நடப்பு ஐபிஎல் தொடரில் 5 முறை ஈடுபட்டதால் அவருக்கு 5 தகுதியிழப்பு புள்ளிகள் பெற்றதால், அடுத்து நடைபெறும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போட்டியிலும் திக்வேஷ் ரதிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கூட்டினால் ரூ. 9.37 லட்சம் ஆகியிருக்கிறது.
இந்த ஐபிஎல் சீசனில் ரூ. 30 லட்சத்துக்கு எடுக்கப்பட்ட இவரது சம்பளத்தில் 31.23 சதவிகிதம் அபராதத்திலேயே கழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னௌ அணி மோசமாக விளையாடினாலும் திக்வேஷ் ரதியின் பந்துவீச்சை அசத்தலாக இருக்கிறது.
இந்த நோட்புக் செலிபிரேஷனை கைவிடுத்து பந்துவீசுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் இந்திய அணியில் இடம்பிடிக்க அனைத்து தகுதியும் இருப்பது கவனிக்கத்தக்கது.