பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அற...
Ranya Rao: கிட்டிய ஜாமீன்; ஆனாலும் ரன்யா ராவால் வெளியே வர முடியாது! - விவரம் என்ன?
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 1974 (COFEPOSA) வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் அவர், தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுவரை நடிகை ரன்யாவிடமிருந்து மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் கர்நாடக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து. அந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் நடிகை ரன்யா ராவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பான உத்தரவில், ``ரன்யா ராவ் மற்றும் கொண்டராஜு இருவரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. இது போன்ற குற்றத்தைச் செய்யக் கூடாது. அனைத்து விசாரணை தேதிகளிலும் விதிவிலக்கு இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நடந்து வரும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். ஆதாரங்களை சிதைக்கவோ அல்லது சாட்சிகளை மாற்றவோ முயற்சி செய்யக் கூடாது. இருவருக்கும் தலா இரண்டு லட்சம் பிணைத் தொகை செலுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இது தொடர்பாக ரன்யா ராவின் வழக்கறிஞர் பி.எஸ். கிரிஷ், "ரன்யா ராவுக்கு ஜாமீன் கிடைத்தாலும்கூட அவர் விடுவிக்கப்பட மாட்டார். ஏனெனில் அவர் மீது அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரன்யா ராவின் பெற்றோர் கர்நாடக் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்" என்றார்.