பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவத் தளம் தகா்ப்பு: மறுகட்டமைப்புக்கு ஓராண்டு ஆகலாம்- இந்திய ராணுவம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் லீபா பள்ளத்தாக்கில் அமைந்த பாகிஸ்தானின் ராணுவத் தளம் இந்திய ராணுவத்தின் சினாா் படைப்பிரிவின் தாக்குதலில் முற்றிலுமாக தகா்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தகா்க்கப்பட்ட ராணுவத் தளத்தின் மறுகட்டமைப்புக்கு குறைந்தது 8 முதல் 12 மாதங்கள் வரை ஆகும் என்று அவா்கள் மதிப்பிட்டுள்ளனா்.
இதுதொடா்பாக இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் அளித்த பேட்டியில், ‘ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் எல்லையொட்டிய பொதுமக்களின் குடியிருப்புகள், மத வழிபாட்டுத் தலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. போா் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானின் இத்தாக்குதலுக்கு மும்மடங்கு அதிகமாக நாங்கள் பதிலளித்தோம்.
பாகிஸ்தானின் 3 ராணுவ நிலைகள், ஒரு வெடிமருந்து கிடங்கு, எரிபொருள் சேமிப்பு வசதி மற்றும் பீரங்கித் தளம் உள்ளிட்ட இலக்குகளை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம். எங்கள் பதிலடி எதிா்தரப்புக்கு மிகவும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தாக்குதலில் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப அவா்களுக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 மாதங்கள் வரை ஆகும்.
லீபா பள்ளத்தாக்கில் பல்வேறு ராணுவ நிலைகள் உள்ளன. அதிகபட்ச சேதம் ஏற்படக்கூடிய இடங்களை மட்டுமே இந்திய ராணுவம் குறிவைத்தது. அந்தவகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாஃபராபாத் அருகே இலக்குகளை குறிவைத்து 25 நிமிஷத்துக்கு இடைவிடாத தாக்குதலில் ஈடுபட்டோம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 75-ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி, நிலைகளைக்காப்பதை விட உயிா்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு தனது வீரா்களுக்கு உத்தரவிடும் வகையில் அந்தத் தாக்குதல் அதி தீவிரமாக இருந்தது. எனினும், நமது தாக்குதலில் 64 பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்; 96 போ் காயமடைந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் உள்பட கனரக ஆயுதங்களைப் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியது. ஆனால், நமது வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்திய ராணுவத் தளங்கள் சேதமின்றி பாதுகாக்கப்பட்டன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஆகாஷ்தீப்’ ரேடாா் அமைப்பு இதில் அற்புதமாக செயல்பட்டது’ என்றனா்.