ம.பி. உயா்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: கடைசி பணி நாளில் உச்சநீதிமன்றம் மீது அதிருப்தி
கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!
கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அடுத்த 4 முதல் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதற்கு ஏற்ற வானிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (மே 20) அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது.
கேரளத்தின் வட மாவட்டங்களான, காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலக்காடு, மலப்புரம், திரிச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புலா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கேரளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரம் கூறுகையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், 204.4 மி.மீ. அளவிலான அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், 115.6 மி.மீ. அளவிலான மிக கன மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன், அதி தீவிர கனமழை மேலும் பல முக்கிய பாதிப்புகளை உண்டாக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் அதிகளவிலான மழை பெய்யவுள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாகவும்; மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் எனவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அரசுத் துறைகள் விரைந்து எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டதுடன், எச்சரிக்கை மிகுந்த பகுதிகளில் வாழும் மக்கள் விரைவாகப் பாதுகாப்பான முகாம்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’! 5 பேர் பலி