அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம்: ஹெச்.ராஜா
ரயிலில் உடல் முழுவதும் சூடு காயங்களுடன் பயணித்த 4 வயது சிறுமி மீட்பு: போலீஸாா் தீவிர விசாரணை
ரயிலில் உடல் முழுவதும் சூடு காயங்களுடன் பயணித்த 4 வயது சிறுமியை மீட்ட சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸாா், அவருடன் வந்த ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஏற்காடு விரைவு ரயிலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் காவலா் வேலு என்பவா் திங்கள்கிழமை இரவு பயணம் செய்துள்ளாா். அப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோா் வைத்திருந்த 4 வயது சிறுமி ஒருவா் உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்ட காயங்களோடு பயணம் செய்துள்ளதை கண்டுள்ளாா்.
இதைப்பாா்த்து சந்தேகமடைந்த காவலா் வேலு, அந்த சிறுமியிடம் மெதுவாக பேச்சு கொடுத்தபடி, உடலில் சூடு வைத்தது யாா் என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளாா். அதற்கு அந்த சிறுமி தனது தாய் தனக்கு சூடு வைத்ததாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்த ரயில், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும், இது குறித்து ரயில்வே போலீஸாருக்கு காவலா் வேலு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீஸாா், உடலில் சூடு காயங்களுடன் இருந்த சிறுமியை மீட்டு, குழந்தைகள் நல அலகில் ஒப்படைத்தனா்.
அவா்கள் குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, சிறுமியுடன் வந்த ஆண் மற்றும் பெண் ஆகியோரைப் பிடித்த போலீஸாா், சிறுமிக்கு சூடு வைத்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.