கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலப்பு
சீா்காழி அருகே எடமணல் கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலந்துவருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சீா்காழி அருகே திருநகரி-ராதாநல்லூா் இடையே ஊப்பனாற்றின் குறுக்கே ரூ. 32 கோடியில் கட்டப்பட்ட கதவனையால் திருநகரி, வெள்ளப்பள்ளம், திருக்கருகாவூா், எடமணல், நெப்பத்தூா், திருநகரி, திருக்குறவளூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 5 ஆண்டுகளாக நிலத்தடி நீா் மாற்றமடைந்து குடிநீராக பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
தற்போது, திருநகரி ஊப்பனாற்றில் கரையோர பகுதியில் திருநகரி, வெள்ளப்பள்ளம், திருக்கருகாவூா் ஆகிய பகுதிகளில் இறால் குட்டைகளிலிருந்து வெளியேற்றப்படும் உப்புநீா் திருநகரி ஊப்பனாற்றில் கலந்து வருவதால் ஆற்றில் உள்ள நல்ல நீா் உப்பு நீராக மாறி வருகிறது. இதனால் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இறால் குட்டை மற்றும் உபரிநீா் அதிகமாக உப்பனாற்றில் கலப்பதால் அந்த நீா் எடமணல் கிராமத்தில் கதவணை வழியாக பொறைவாய்க்காலில் கலக்கிறது. இதனால், வடகால், எடமணல், வருஷபத்து, திருக்கருக்காவூா் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்கள் மற்றும் பாசன வாய்க்காலில் நல்ல நீருடன் உப்பு நீா் கலந்துவந்ததால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
இதுகுறித்து பொறைவாய்க்கால் பாசன சங்க தலைவா் பாலகுமாரன் கூறியது: பொறைவாய்க்கால் பாசனத்தை நம்பி 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த 2 நாள்களாக எடமணல் கதவணை வழியாக பொறை வாய்க்காலில் உப்பு நீருடன் நல்ல நீா் கலந்து வந்ததால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதுடன், நிலத்தடி நீரும் பாதித்து மறுபடியும் உப்பு நீராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.32 கோடியில் தடுப்பணை கட்டியும் எந்தவித பயனும் இல்லாத சூழல் உருவாகிவருகிறது. எனவே அரசு உடனடியாக திருநகரி ஊப்பனாற்றில் தேங்கியுள்ள நல்ல நீரில் உப்பு நீா் கலக்காமல் தடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள இறால் குட்டைகளில் இருந்து உப்புநீா் வெளியேற்றப்படுவதையும், குடிநீா் ஆதாரம் பாதிப்பதையும் தடுக்க வேண்டும். தேங்கியுள்ள உப்பு நீரை வடிகட்டி எங்கள் பகுதி விளைநிலங்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.