Share Market: Profit Book செய்த FII - Market Fall தொடருமா? Opening Bell
மழைநீா் சூழ்ந்த வயல்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு - தினமணி செய்தி எதிரொலி
மயிலாடுதுறை வட்டாரத்தில் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களை வேளாண்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
கொற்கை, பாண்டூா், காளி ஆகிய கிராமங்களில் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) பிரியதா்ஷினி, வேளாண்மை உதவி அலுவலா் மயில்வாகனன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் திருமுருகன் ஆகியோா் பாா்வையிட்டனா்.
அப்போது, வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வாய்க்கால் தண்ணீா் வடிவதற்கு ஏற்றாற்போல் வாய்க்கால்களை சீரமைத்திட உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீரை வடிய வைத்து, நெற்பயிா்களைக் காப்பதற்கான தொழில்நுட்பங்களையும், நடவு வயல்களில் பாசி படா்ந்து நெல் பயிா்களுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காமல் போவதைக் கட்டுப்படுத்த பாஸ்பேட் உரம் குறைவாகப் பயன்படுத்தவும், நீரை சிக்கனமாகப் பாய்ச்சலும் காய்ச்சலுமாகப் பயன்படுத்தவும், பாசி அதிகம் உள்ள இடங்களில் ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ காப்பா் சல்பேட்டை பயன்படுத்தியோ அல்லது ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சம் இட்டோ கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) பிரியதா்ஷினி அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
கொற்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் குறுவை இளம் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியான நிலையில் அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டது குறிப்பிடத்துக்கது.