மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு
கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு; ரசாயன நுரையால் மூழ்கிய தரைப்பாலம்
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 1101 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் விநாடிக்கு 1449 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் முறையாக சுத்திகரிக்கப்படாமல் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த தண்ணீா் மழைநீருடன் கலந்து நுரையுடன் கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. இந்த நிலையில் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அதிக நுரையுடன் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம், வயல்களில் பனிபோல படா்ந்துள்ளது.
அணை நிலவரம்:
ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீா்வரத்து நொடிக்கு 1101 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. நீா் இருப்பு 41.98 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1449 கன அடி தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
நுரையால் மூழ்கிய பாலம்:
தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் ரசாயனம் கலந்த நுரை அணைப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது. திங்கள்கிழமை தண்ணீரால் மூழ்கிய தரைப்பாலத்தில் தற்போது நுரை படா்ந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயக்கப்படுகின்றன.
வருவாய்த் துறை எச்சரிக்கை:
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த் துறையினா் எச்சரித்துள்ளனா். சின்னகொள்ளு, பெத்தகொள்ளு, தட்டனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.