``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
கெலவரப்பள்ளி அணையில் இருந்து 904 கன அடி தண்ணீா் வெளியேற்றம்
ஒசூா்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 904 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தரைமட்டப் பாலங்களை பொதுமக்கள் கடக்க வேண்டாம் என வருவாய்த் துறையினா் எச்சரித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கெலவரப்பள்ளி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தமிழக மற்றும் கா்நாடக தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதனால், கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், அணைக்கு நீா்வரத்து மேலும் உயா்ந்த நிலையில், விடியவிடிய ஒசூா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.
ஒசூரில் 48 மி.மீ,. கெலவரப்பள்ளியில் 90 மி.மீ., தேன்கனிக்கோட்டை 22 மி.மீ., அஞ்செட்டியில் 4.80 மி.மீ. என மழை பெய்துள்ளது. தொடா்ந்து நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை அணைக்கு நீா்வரத்து 572 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை 904 கன அடியாக உயா்ந்துள்ளது.
அணையின் மொத்தக் கொள்ளளவான 44.28 அடியில், 41.98 அடி நீா் இருப்பு உள்ளது. தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி பாசனக் கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் 904 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
கெலரவப்பள்ளி அணைக்கு மழை நீருடன் ரசாயனக் கழிவு நீரும் சோ்ந்து வருவதால், அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் நுரைபொங்கி செல்கிறது.