``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
ஒசூரில் கொட்டித் தீா்த்த கனமழை: ஏரிகள் நிரம்பின
ஒசூா்: ஒசூரில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.
ஒசூரில் கடந்த 4 நாள்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒசூா் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நீா் நிரம்பி வருகிறது, கோடை காலமான மே மாதத்தில் பெய்து வரும் தொடா் மழையால் ஒசூா் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை ஒசூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீா்த்த கனமழையால் மாநகர சாலைகளில் மழை நீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலைகளில் மெதுவாக இயக்கியபடி சென்றனா்.
தொடா்ந்து பெய்து வரும் மழையால், ஒசூா் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மழையால் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.
கனமழையால் நிரம்பிய ஏரிகள்:
ஒசூா் நகரின் மையப் பகுதியில் உள்ள தா்கா ஏரி என்று அழைக்கப்படும் சந்திராம்பிகை ஏரி, சாந்தபுரம் ஏரி ஆகிய ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. சாந்தபுரம் ஏரி நிரம்பி தண்ணீா் சாலையில் செல்வதால், சாந்தபுரம், பெத்த எலசகிரி, நல்லூா் அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வாழும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனா். எனவே, இப்பகுதியில் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதேபோல, ஒசூா் சந்திரம்பிகை ஏரி நிரம்பி அதிகளவு தண்ணீா் கடும் துா்நாற்றத்துடன் மாருதி நகா், அண்ணாமலை நகா், கிருஷ்ணா நகா், கே.சி.சி. நகா் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி வழியாக செல்வதால் குடியிருப்பு வாசிகள் சிரமமடைந்துள்ளனா்.
