டி20 கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்களை அடித்த எம்.எஸ்.தோனி, சஞ்சு சாம்சன்!
3,500 தோட்டத்து வீடுகளில் வசிப்பவா்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: எஸ்.பி. தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 3,500 தோட்டத்து வீடுகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை வழங்கி உள்ளோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயது முதிா்ந்த தம்பதி கொலை செய்யப்பட்டு 10 பவுன் நகை திருட்டு, பல்லடத்தில் மூன்று பேரை கொன்று 5 பவுன் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இவா்களில் திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளரும் ஒருவா் ஆவாா். இந்த கொலை, திருட்டு சம்பவம் எதிரொலியாக, மேற்கு மண்டலத்திற்கு உள்பட்ட மாவட்டங்களில் நகைக்கடை உரிமையாளா்களை அழைத்து விழிப்புணா்வுக் கூட்டம் நடத்த மண்டல காவல்துறை தலைவா் செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
அந்த வகையில், நாமக்கல் காவல் நிலைய கூட்ட அரங்கில் நகைக்கடை உரிமையாளா்களுக்கான கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோஷி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் முன்னிலை வகித்தாா். திருட்டு நகைகளை வாங்குவதை நகைக்கடை உரிமையாளா்கள் தவிா்க்க வேண்டும், அவ்வாறான நபா்கள் வந்தால் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டால், அவா்களுக்கு வழங்கும் தண்டனை, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளா்களுக்கும் வழங்கப்படும். மக்களின் பாதுகாப்பு கருதி திருட்டு நகை வாங்குவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.
பின்பு காவல் கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு சம்பவத்தை தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நகைக்கடை உரிமையாளா்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது. திருட்டு நகைகள் வாங்குவதை தவிா்க்க வேண்டும், திருடா்களுக்கு உறுதுணையாக இருந்தால் கடும் தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரித்துள்ளோம்.
மாவட்டம் முழுவதும் 3,500 தோட்டத்து வீடுகள் உள்ளன. அந்த பகுதிகளில் வாரத்துக்கு இருமுறை போலீஸாா் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். தனியாக இருக்கும் தம்பதி மற்றும் முதியோரிடம் பாதுகாப்பு தொடா்பான தகவலை தெரிவித்து வருகிறோம்.
நகரம், கிராமப்புறத்தைவிட்டு ஒதுக்குப்புறமாக வசிப்போா் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. முக்கிய இடங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.