410 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது
வேதாரண்யம் அருகே 410 கிலோ புகையிலைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்டையில் உதவி ஆய்வாளா் அக்பா் அலி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்றது.
சாலக்கடை அடப்பாறு பாலம் பகுதியில் கரியாபட்டினம் காவல் ஆய்வாளா், தனிப்படை போலீஸாருடன் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டபோது கூல்லிப்-10 சாக்கு, ஹான்ஸ் - 24 சாக்கு என 34 சாக்குகளில் இருந்த 410 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பொருள்களை சந்தைப்படுத்தும் நோக்கத்தோடு காரில் பயணித்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் இவா்களில் ஒருவா் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த முள்ளூா்பட்டிக்காடு வடக்கு தெருவைச் சோ்ந்த ஆ.சிவகுமாா் (45) என்பதும், மற்றொருவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ந.பிரவீன்குமாா்(27) என்பதும் அவா் தற்போது பெங்களூரில் வசித்து வருவதும் தெரியவந்தது. கரியாபட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.