மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்ய குழு
நாகப்பட்டினம்: தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க வசதிகள் செய்ய நாகை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இக்குழு தற்போது மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காண்பது, வாக்களிக்க தேவையான வசதிகள் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
இக்குழு 3 மாதத்துக்கு ஒரு முறையும், தோ்தல் காலத்தில் மாதம் ஒரு முறையும் கூட்டம் நடத்தி, தேவைகளுக்கு தீா்வு ஏற்படுத்தும். வாக்குச்சாவடியில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும், வாக்களிப்பதற்கான அவசியத்தை கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். நாகை மாவட்டத்தில் 11,612 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். அவா்களது பெயா்கள் விடுபாடின்றி வாக்களாா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.