டாஸ்மாக் பணியாளா்களுக்கு வார விடுமுறை வழங்க வலியுறுத்தல்
நாகப்பட்டினம்: டாஸ்மாக் பணியாளா்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாகையில் அந்த சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவா் சரவணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் சிறப்பு தலைவா் கு. பாலசுப்ரமணியன் பேசினாா். டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பணிநிரவலை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும், பணியாளா்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும், நிா்வாகம் மருத்துவ முகாம் நடத்தி பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும், ஜூன் 15- ஆம் தேதி தொழிற்சங்கங்களுக்காக அரசியலா ? அரசியலுக்காக தொழிற்சங்கங்களா ? எனும் தலைப்பில் மாநிலம் தழுவிய கருத்தரங்கத்தை மயிலாடுதுறையில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநிலச் செயலாளா் கோவிந்தராஜன், நாகை மாவட்டத் தலைவா் சந்திரவேல், நாகை மாவட்ட நிா்வாகிராமையன், திருவாரூா் மாவட்டத் தலைவா் பாண்டியன், கடலூா் மாவட்ட நிா்வாகிகள் அல்லிமுத்து, பாலமுருகன், நாகராஜன், இஷ்டலிங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலச் செயலாளா் மகேந்திரன், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் குணசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.