நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாகத் தேர்வான பி.ஆர். கவாய், கடந்த 17ஆம் தேதி முதல்முறையாக தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்திற்குச் சென்றுள்ளார்.
தலைநகரான மும்பைக்குச் சென்றபோது அவரை வரவேற்க அரசுத் தரப்பில் இருந்து மகாராஷ்டிர தலைமைச் செயலா், மாநில காவல் துறைத் தலைவர், மும்பை காவல் ஆணையர் என யாரும் வரவில்லை. ஆனால், இவர்கள் அனைவரும் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை வரவேற்க வேண்டும் என்பது நடைமுறை.
மும்பை நகரிலுள்ள தாதர் பகுதியில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்டு கவாய் பேசினார். இச்சம்பவம் வழக்குரைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.
தலைமை நீதிபதி கவாய், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், புத்த மதத்தைத் தழுவியர் என்பதாலும் அவருக்கு அரசுத் தரப்பில் உரிய மரியாதையுடன் கூடிய அழைப்பு தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைமை நீதிபதியை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு முதல்முறை மகாராஷ்டிரத்திற்கு வந்த பி.ஆர். கவாய்க்கு மும்பை விமான நிலையத்தில், தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர் மற்றும் மும்பை காவல் துறை ஆணையர் ஆகியோர் உரிய முறையில் வரவேற்பு அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிப்புக்குரிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உரிய மரியாதை அளிக்காத அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நெறிமுறைகள் தவறியதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் கோரிக்கை வைத்துக்கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.