மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!
மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால், வரும் மே 21 முதல் 24 ஆம் தேதி வரையில் அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்தில் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மும்பையிலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், முன்பு கூறப்பட்ட அதே அரபிக்கடல் பகுதியில் மே 22 ஆம் தேதியன்று குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி வடக்கு திசையில் நகரக் கூடும் எனக் கணித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வுத் துறை அதிகாரி சுபாங்கி புட்டே கூறுகையில், அரபிக்கடலில் உருவாகும் புயலினால் மகாராஷ்டிரத்தில் வரும் மே 21 முதல் 24 வரையில் கனமழை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மகாராஷ்டிரத்தின் மத்திய தெற்குப் பகுதிகள், தென் கொங்கண் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகள் எவை?