இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன...
மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே
11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தில் 10 முறை அமெரிக்காவுக்குச் சென்றுவந்ததும் அடங்கும் என சுட்டிக்காட்டிய அவர், உலக அரங்கில் இந்தப் பயணங்கள் ஏதேனும் பலனை அளித்ததா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் அடிக்கடி அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் மல்லிகார்ஜுன கார்கே தனத் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கார்கே பதிவிட்டுள்ளதாவது,
''பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளாக அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார். ஆனால், நமது இந்தியா தற்போது தனித்துவிடப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி 72 நாடுகளுக்கு 151 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதில், 10 முறை அமெரிக்காவுக்குச் சென்றுவந்துள்ளார். ஆனாலும், மோடியின் வெளியுறவுக் கொள்கையால் நம் நாடு தனித்து நிற்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்று புகைப்படங்களை எடுத்துக்கொள்வது மட்டும்தான் பிரதமரின் பணியா?
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1.4 பில்லியன் டாலர் கொடுத்து உதவ முன்வந்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக நமது துணிச்சலான ராணுவப் படையினர் தாக்குதல் நடத்தி முன்னேறிவந்தபோது, திடீரென போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போரை நிறுத்த 7 முறை மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். அவரின் இப்பேச்சு இந்தியாவை அவமதிக்கும் வகையில் உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நின்றது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல், இந்த விவகாரத்தை மூடி மறைக்கப்பார்க்கிறார்.
மோடி அரசு உரிய பாதுகாப்பை வழங்காததன் காரணமாகவே பஹல்காமில் குடிமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல் துறையோ அல்லது படைகளையோ அங்கு நிறுத்தவில்லை. மோடி இது குறித்து எதுவும் கூறவில்லை. மே 17ஆம் தேதி பிரதமர் மோடி காஷ்மீர் செல்லவேண்டியிருந்தது. ஆனால், அவர் செல்லவில்லை. ஏனெனில் உளவுத் துறை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்திருப்பார்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க |கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகள் எவை?