ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்: உயிர்த் தப்பிய பயணிகள்!
தில்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால் இன்று (மே 21) சேதமடைந்தது.
எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
இது குறித்து இண்டிகோ விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘’தில்லியில் இருந்து இன்று ஸ்ரீநகர் புறப்பட்ட 6E 2142 என்ற பயணிகள் விமானம், நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையில் சிக்கியது. விமானி மற்றும் குழுவினர், கொடுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி விமானத்தை ஸ்ரீநகரில் பத்திரமாகத் தரையிறக்கினர்.
தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்புக்குப் பிறகு இது குறித்து முழுமையான அறிக்கை வெளியிடப்படும்’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை
தில்லியில் இன்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் இரவு ஆலங்கட்டி மழை பெய்தது. தில்லியில் கீதா காலனி உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதையும் படிக்க |கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!