ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் தோழி விடுதி: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்
ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி கட்டுமானப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 50 படுக்கையுடன் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய தோழி விடுதி கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், ராணிப்பேட்டையில் கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று பூமி பூஜை செய்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், நகா்மன்ற தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, மாவட்ட சமூக நல அலுவலா் வசந்தி ஆனந்தன் (பொ), நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ்.வினோத், து.குமாா், வட்டாட்சியா் ஆனந்தன், இளநிலை பொறியாளா் கோவிந்தசாமி, ஒப்பந்ததாரா் ரமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.