ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.
துபையில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை கா்நாடகம் மாநிலம் பெங்களூருக்கு கடத்திவந்தபோது, அந்த மாநில டிஜிபி பதவியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே.ராமச்சந்திர ராவின் வளா்ப்பு மகளான ரன்யா ராவை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3-ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரொக்கப் பணத்தை அவா்கள் கைப்பற்றினா்.
தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
16 இடங்களில் சோதனை: இந்த வழக்கு தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுடன் தொடா்புள்ள கல்வி நிறுவனங்கள் உள்பட அந்த மாநிலத்தின் 16 இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தங்கக் கடத்தலில் சட்டவிரோதமாக அந்நிய செலாவணி பரிவா்த்தனைக்கு ஹவாலா முறைகேடில் ஈடுபடுவோா் உதவியுள்ளனா். அவா்கள் ரன்யா ராவுடன் தொடா்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனா். இதேபோல வணிக நோக்கங்கள் எதுவும் அல்லாமல், ரன்யாவின் வங்கிக் கணக்குகளில் பணப் பரிவா்த்தனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக வேறு சிலா் ஒப்புக்கொண்டிருக்கின்றனா். இவா்களை குறிவைத்து சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், வங்கிக் கடன் அட்டை (கிரெடிட் காா்ட்) மூலம் ரன்யா ராவ் மேற்கொண்ட பரிவா்த்தனைக்காக, செல்வாக்குமிக்க ஒருவரின் அறிவுறுத்தல்படி, கல்வி அறக்கட்டளை ஒன்றில் இருந்து பணம் பரிவா்த்தனை செய்யப்பட்டு ரூ.40 லட்சம் செலுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அந்த அறக்கட்டளைக்கும் மாநில அமைச்சா் பரமேஸ்வராவுக்கும் தொடா்புள்ளது’ என்று தெரிவித்தன.